அவுஸ்திரேலியாவில் இலங்கையர் கைது

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: அவுஸ்திரேலியாவில் இலங்கையர் கைது

by Bella Dalima 31-08-2018 | 4:14 PM
Colombo (News 1st)  அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான திட்ட ஆவணங்கள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 25 வயதான குறித்த சந்தேகநபர் அவுஸ்திரேலிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொள்வதற்கு இலக்கு வைத்துள்ள நபர்களின் பெயர்கள், இடங்கள் ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்ட புத்தகமொன்று பல்கலைக்கழக ஊழியருக்கு கிடைத்ததாக அவுஸ்திரேலிய ஊடங்கள் குறிப்பிட்டுள்ளன. இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் மேலும் பல மின் உபகரணங்கள் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரகாரம் குறித்த இலங்கை பிரஜை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிணை வழங்குவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாகத் தெரிவித்தே இலங்கை பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இலங்கையர் மொஹமட் நிசாம்டீன் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.