சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தும் தேவையில்லை

வடக்கில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த வேண்டிய தேவை இல்லை: மகாவலி இராஜாங்க அமைச்சர் 

by Staff Writer 30-08-2018 | 7:51 PM
Colombo (News 1st) மகாவலி திட்டத்தின் ஊடாக வடக்கில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவில்லை என மகாவலி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவர் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஊடக அமைப்பில் அவர் தெரிவித்திருந்ததாவது,
அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே வடக்கிலும் தெற்கிலும் மகாவலித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் வட பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதாகும். அதேபோன்று, ஒரு சிங்களவரையேனும் புதிதாக குடியமர்த்தும் தேவை எமக்கு இல்லை. நாம் மகாவலித் திட்டம் மூலம் அவ்வாறு செய்ததும் இல்லை. குறிப்பாக அண்மையில் நான் அந்த L வலயத்திற்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டேன். 810 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க வேண்டியுள்ளது. அந்த தமிழ் குடும்பங்களின் காணிப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு நாம் அறிவித்துள்ளோம். அதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். எனவே, தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தத் திட்டத்துடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சமமான விதத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதே ஜனாதிபதியின் நோக்கம். வட பகுதி பிள்ளைகளும் கிழக்கு பிள்ளைகளும் எமது நாட்டின் பிள்ளைகளே. பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டுமாக இருந்தால் மகாவலி அமைச்சுடன் கலந்துரையாடலாம். அதனை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் பலனில்லை. 88 மற்றும் 2007ஆம் ஆண்டு வர்த்தமானியின்படியே அங்கு அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. காணிகளை வழங்குமாறும், உறுதிப்பத்திரங்களை வழங்குமாறும் மின்சாரத்தை வழங்குமாறும் கோஷமிட வேண்டியவர்கள் அவற்றை வேண்டாம் வேண்டாம் என்று கூறுகின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளை எங்கேனும் பார்த்திருக்கின்றீர்களா? இவை அவசியமில்லை என்று கூறும் இந்தக் குழுவை எங்காவது ஒரு காட்டில் தான் விட வேண்டும். மக்களை இதே நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை அந்த அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு வைத்துக்கொண்டாலே அவர்களின் இருப்பு சீராகும். வடக்கிற்கு அபிவிருத்தி ஏற்பட்டால் அப்பகுதி மக்கள் புதிதாக சிந்திக்க ஆரம்பிப்பார்கள். தமிழ் பிள்ளைகள் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பார்கள். ஆகவே, இவ்வாறான தலைவர்களை புறக்கணித்து உங்களுக்குத் தேவையான தலைவர்களை தெரிவு செய்துகொள்ளுமாறு வட பகுதி மக்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனைய செய்திகள்