பல் வலியுடன் பங்கேற்று தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன்

பல் வலியுடன் பங்கேற்று தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன்: ஆசிய விளையாட்டு விழாவில் சாதனை

by Bella Dalima 30-08-2018 | 9:07 PM
ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் Heptathlon எனப்படும் ஏழு அம்சப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக ஸ்வப்னா பர்மன் பதிவானார். கடுமையான பல் வலியால் அவதிப்பட்ட இவர் பேண்டேஜ் ஒட்டிக்கொண்டு போட்டியில் பங்கேற்று இந்த வெற்றியை ஈட்டியமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் மகளிருக்கான Heptathlon எனப்படும் ஏழு அம்சப் போட்டி இரண்டு நாட்களாக இடம்பெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் பாய்தல், ஈட்டி எறிதல், குண்டெறிதல் ஆகிய ஏழு விளையாட்டுகள் Heptathlon போட்டியில் உள்ளடங்குகின்றன. ஏழு விளையாட்டுகளின் முடிவில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராகத் தீர்மானிக்கப்படுவார். அந்த வகையில், ஏழு அம்ச விளையாட்டுகளின் முடிவில் 6026 புள்ளிகளைப் பெற்ற 21 வயதுடைய ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். மேற்கு வங்கத்தின் ஹோஸ்பராவை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். ஸ்வப்னா பர்மனின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டுநராகவும், தாய் தேயிலை கொழுந்து பறிப்பவராகவும் பணிபுரிந்து, அன்றாடம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தைப் பராமரிக்கின்றனர். இவ்வாறான நிலையில், ஆசியாவை வெற்றிகொண்ட ஸ்வப்னா பர்மன் போட்டியிடும் காட்சிகளை அவரது குடும்பத்தார் இறைவனை வழிபட்டவாறே தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில், ஸ்வப்னா பர்மனின் வெற்றி உறுதியானதும் அவர் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்து ஆனந்தக்கண்ணீர் வடித்து இறைவனின் திருவடியில் வீழ்ந்து தனது நன்றியை செலுத்தும் காட்சி தற்போது ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.