by Staff Writer 30-08-2018 | 8:29 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட யுவதி ஐந்து மாத கர்ப்பிணி என கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் குறிப்பிட்டார்.
கர்ப்பம் தரித்தமையால் இந்த கொலை இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யுவதியின் கொலை தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
யுவதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத்தொலைபேசி மலையாளபுரம் பகுதியிலிருந்து நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியை பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, யுவதியின் மேலாடை அம்பாள்புரம் பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக பணிபுரிந்த யுவதியே சடலமாக மீட்கப்பட்டார்.
முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதான யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.