காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

by Staff Writer 30-08-2018 | 1:03 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். 'காணாமல் ஆக்கப்படுதலுக்கு இடமளிக்கப்போவதில்லை' என்ற தொனிப்பொருளில் இம்முறை இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (30) ஆராயவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக் காட்டியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அம்பாறை, திருக்கோவில் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினால் இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. திருக்கோவில் தபால் நிலையத்திற்கு முன்னாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்துள்ளனர். இதனையடுத்து, மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.