இறுதிக்கிரியையை அமைதியாக நடத்துமாறு உத்தரவு

கலஹா வைத்தியசாலையில் குழந்தை மரணம்: இறுதிக்கிரியையை அமைதியாக நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 30-08-2018 | 4:49 PM
Colombo (News 1st) கண்டி - கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் இறுதிக்கிரியையை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலஹா பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கண்டி நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் இறுதிக்கிரியைகள் தெல்தொட்ட பகுதியில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதான சங்கர் சஞ்சீவன் என்ற ஆண் குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை (28) உயிரிழந்தது. இதனை அடுத்து ஏற்பட்ட அமையின்மையின் போது, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன், வைத்தியர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 8 மணித்தியாலமாக நிலவிய அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டனர். இரவு 8.30 அளவில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வைத்தியசாலையில் கடமையாற்ற வைத்தியர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கலஹா வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில், கலஹா பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.