என்னை கட்சியில் சேர்க்க மறுக்கிறார் ஸ்டாலின்

என்னை கட்சியில் சேர்க்க மறுக்கிறார் ஸ்டாலின்: அழகிரி குற்றச்சாட்டு

by Bella Dalima 30-08-2018 | 4:11 PM
தன்னை தி.மு.க-வில் மீண்டும் சேர்க்க வேண்டுமென கோரி வருவதாகவும் ஆனால், அதனை மு.க. ஸ்டாலின் மறுத்து வருவதாகவும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தனக்கோ தன் மகன் துரை தயாநிதிக்கோ கட்சியில் எந்தப் பதவியையும் கேட்கவில்லையென்றும் அழகிரி கூறியுள்ளார். தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. மு. கருணாநிதி மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி, கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன்னுடன் தான் இருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்த ஆரம்பத்தார். ஆனால், கட்சித் தலைமையிலிருந்து எந்த சமிக்ஞையும் வராத நிலையில், செப்டம்பர் 5ஆம் திகதியன்று சென்னையில் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி நினைவஞ்சலி ஊர்வலம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு மதுரை சத்யசாயி நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில நாட்களாக இந்த ஊர்வலம் தொடர்பாக ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் வரவில்லையென ஊடகங்களில் செய்திகள் வெளியானதால், நேற்று ஊடகங்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம் கட்சியில் சேர்க்கப்பட்டால் மு.க. ஸ்டாலினை தலைவராக ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சியில் சேர வேண்டுமென்றால் தலைவராக ஏற்றுத்தானே ஆகவேண்டும்" என்று பதிலளித்துள்ளார். இது குறித்து கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் இதுவரை எவ்வித கருத்தையும் வௌியிடவில்லை.