by Chandrasekaram Chandravadani 30-08-2018 | 10:20 AM
மியன்மாரின் ராக்கின் பிராந்தியத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இராணுவ வன்முறைகள் தொடர்பில், ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ஸெய்ட் அல் ராட் ஹூசைன் (Zeid Raad al Hussein) தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர்ப்பதற்கான நோபல் பரிசை வென்றவரின் முயற்சிகள் மிகவும் வருந்தத்தக்கவை என ஸெய்ட் அல் ஹூசைன் பி.பி.சி க்குத் தெரிவித்துள்ளார்.
ஒரு பதவியிலிருந்த ஆங் சான் சூகியால் ஏதாவது செய்ய முடியும். அவர் அமைதியாகவே இருக்கலாம் அல்லது பதவியை இராஜினாமா செய்வது அதைவிட சிறந்தது என ஸெய்ட் அல் ஹூசைன் தனது செவ்வியில் மேலும் குறிப்பிட்டார்.
ரோஹிங்யா மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மியன்மார் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என ஐ.நா. அறிக்கை வௌியிட்டதன் பின்னர், ஹூசைனின் இந்தக் கருத்து வௌியாகியுள்ளது.
ஆனால், மனித உரிமை மீறல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என ஐ.நா வின் அறிக்கையை மியன்மார் நிராகரித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து, சூகிக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அதேநேரம், குறித்த வன்முறைகளிலிருந்து தப்பி 700,000க்கும் அதிகமான ரோஹிங்யா மக்கள் பங்களாதேஷில் அகதிகளாகத் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.