மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியம் உரிய முறையில் செயற்படாமையால் 2.5 பில்லியன் ரூபா நட்டம்

மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியம் உரிய முறையில் செயற்படாமையால் 2.5 பில்லியன் ரூபா நட்டம்

மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியம் உரிய முறையில் செயற்படாமையால் 2.5 பில்லியன் ரூபா நட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2018 | 10:38 pm

Colombo (News 1st)  மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியத்திலுள்ள அனைத்து நிதியையும் அரச வங்கிகள் மற்றும் பிணையங்களில் முதலீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ முன்வைத்த பிரரேணைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மஹபொல நிதியத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த விடயத்தை தெரிவித்தார்.

மஹபொல நிதியத்தின் முழு உரிமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சில நிறுவனங்களின் செயற்பாடுகளினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மிக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு உதவும் பொருட்டு இந்த மஹபொல புலமைப் பரிசில் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இலங்கையின் பிரதம நீதியரசரே மஹபொல நிதியத்தின் பொறுப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

1981 ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் கப்பல்துறை அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலியினால் இந்த நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த நிதியம் சர்வதேச மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதன் பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது மஹபொல புலமைப்பரிசில் நிதியம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, இந்த நிதியத்தை உரிய முறையில் செயற்படுத்தாமை காரணமாக 2.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த மஹபொல நிதியத்திற்கு பொறுப்பாளராகவுள்ள பிரதம நீதியரசர் இது குறித்து மேலதிகக் கவனத்தை செலுத்த வேண்டிய தேவை இருப்பதுடன், இது தொடர்பில் அவசர கணக்காய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு கணக்காய்வாளர் நாயகத்திற்கு இருக்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்