தொழிற்சங்க நடவடிக்கையில் வனஜீவராசிகள் அதிகாரிகள்

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

by Staff Writer 29-08-2018 | 7:05 AM
Colombo (News 1st) வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். மின்னேரியா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோரியே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. பொலிஸாருடன் நேற்று (28) மாலை நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து, இன்று (29) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் சங்கத்தின் தலைவர் இந்திக வசந்த பீரிஸ் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன்பின்னர், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இரவு மீனவர்கள் சிலர் முன்னெடுத்த தாக்குதலின்போது, மின்னேரியா தேசிய பூங்காவில் கடமையாற்றிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மூவர் தொடர்ந்தும் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 26 ஆம் திகதி மின்னேரியா தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்து, சட்ட ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் வனஜீவராசி அதிகாரிகளால் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, வனஜீவராசிகள் அலுவலகத்திற்குள் நுழைந்த மீனவர்கள் சிலர், அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைது செய்யப்பட்டிருந்த மீனவரை அழைத்துச் சென்றதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.