லக்ஷ்மன் கிரியெல்ல - ஜப்பான் அமைச்சர் சந்திப்பு

லக்ஷ்மன் கிரியெல்லவுடன் ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

by Staff Writer 29-08-2018 | 7:22 PM
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஷூயுகி நகானே (Kazuyuki Nakane), பதில் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை இன்று சந்தித்தார். ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (28) நாட்டை வந்தடைந்தார். சில வாரங்களுக்குள்ளேயே ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இரண்டாவது சிரேஷ்ட இராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர், பதில் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். மத்திய அதிவேக வீதியின் மூன்றாவது கட்டம், ஜப்பான் - இலங்கை இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 66 வருடங்கள் பூர்த்தி, கொழும்பு துறைமுகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு இறங்குதுறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி, கண்டி நகர் அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி, பசுமை பூங்காவொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர், ஹூனுப்பிட்டிய ஶ்ரீ கங்காராம விஹாரைக்கு இன்று மாலை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஜப்பான் உதவியின் கீழ் 11 மில்லியன் டொலருக்கும் அதிக பெறுமதியான இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் இன்று மாலை கையளிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் கடற்பிராந்தியத்தின் ஆய்வு நடவடிக்கை, காப்பாற்றும் செயற்பாடுகள், எரிபொருள் கசிவை முகாமைத்துவப்படுத்தல் என்பவற்றுடன் கடற்பாதுகாப்பிற்காகவும் இந்த கப்பல்களை பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.