மக்கள் சக்தி: விலங்குகள் நடமாடும் பாடசாலை

மக்கள் சக்தி: விலங்குகள் நடமாடும் பாடசாலை, குழிகளைத் தோண்டி குடிநீரைப் பெறும் மக்கள்

by Bella Dalima 29-08-2018 | 9:23 PM
பகலில் மாணவர்கள் கற்றலில் ஈடுபடும் பாடசாலையொன்றில் இரவில் விலங்குகள் நடமாடுகின்றன. பாடசாலை மாணவர்கள் தரையில் அமர்ந்து கற்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது. மக்கள் சக்தி - இல்லங்கள் தோறும் குழுவினர் இன்று அந்த பாடசாலைக்கு சென்றிருந்தனர். மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பெரியபுல்லுமலையில் குறித்த பாடசாலை அமைந்துள்ளது. இந்த ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன், 9 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். பெரியபுல்லுமலை - அம்பகஸ்தென்ன உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். வகுப்பறைகளில் கதிரைகளுக்கும் மேசைகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நிலத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாடசாலையைச் சுற்றி மதிலோ, வேலியோ இன்மையால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் விலங்குகள் உட்பிரவேசிக்கின்றன. பாடசாலை உபகரணங்கள் திருடப்படுவதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். காலையில் பாடசாலை செல்லும் மாணவர்கள் விலங்குக்கழிவுகளை அகற்றிய பின்னரே கற்றல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த மாணவர்களின் நிலையைப் பார்வையிட்ட மக்கள் சக்தி குழுவினர், தொடர்ந்து வெலிக்காகண்டி கிராமத்திற்கு பயணித்ததுடன், அங்கு யானைகளின் தொல்லையால் அவதியுறும் மக்களை சந்தித்துக் கலந்துரையாடினர். இதனையடுத்து பயணம் வவுணதீவை நோக்கி ஆரம்பித்தது. வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உன்னிச்சை பகுதியில் நான்கு கிராமங்கள் காணப்படுகின்றன. உன்னிச்சை, உன்னிச்சை 8ஆம் கட்டை, கரவெட்டியாறு, ராஜதுரை நகர் ஆகிய கிராமங்களே அவையாகும். இங்குள்ள உன்னிச்சை குளத்திலிருந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது. எனினும், குளத்தின் அமைவிடத்தை சூழவுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீரைப் பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. உன்னிச்சை குளத்திற்கு அருகில் குழிகளைத் தோண்டி அதிலிருந்து குடிநீரைப் பெற வேண்டியுள்ளதாக மக்கள் கூறினர். மட்டக்களப்பு - தும்பாலச்சோலை கிராம மக்களும் குடிநீர் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வாரத்திற்கு ஒரு தடவை பவுசர்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீர் போதுமானதாக இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். நீருடன் பவுசர் வரும் தினத்தில் ஜீவனோபாயத்திற்காக வயல் நிலத்திற்கு சென்றால், அந்த தினத்திற்கான குடிநீரையும் பெற முடியாத நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. இதேவேளை, சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக ஆயித்தியமலை கிராம மக்கள் தெரிவித்தனர். இதேபோன்ற பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நெல்லூர் கிராம மக்களையும் மக்கள் சக்தி குழுவினர் இன்று சந்தித்தனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று அதனை செலுத்த முடியாமல் அல்லலுறுகின்றனர். இதேவேளை, மக்கள் சக்தி திட்டத்தின் மற்றைய குழுவினர் மொனராகலை - கனவேகல்ல கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்தனர். கனவேகல்ல கிராமத்திற்கு செல்லும் வீதி புனரமைக்கப்படாதுள்ளமையால், சுமார் 170 குடும்பங்கள் போக்குவரத்தில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. மக்களின் பிரச்சினைகளைத் தேடிச்செல்லும் மற்றைய குழுவினர் பிபில , மெதகம உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். சுத்தமான குடிநீர், போக்குவரத்து வசதிகளின்றி இங்குள்ளோர் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தம்பான - மெதகம கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் திக் ஓயாவிற்கு மேலாக பாலமொன்றை நிர்மாணித்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். புத்தளம், உடப்பு - சின்னப்பாடு மற்றும் பிள்ளையாவத்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பணம் கொடுத்து குடிநீரைப் பெற்று வருகின்றனர்.