பாடசாலை புத்தகங்களை அச்சிடும்பணி தனியார் துறையிடம்

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி தனியார் துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

by Staff Writer 29-08-2018 | 11:03 AM
Colombo (News 1st) பெரும்பாலான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகள் இம்முறை தனியார் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இதனூடாக பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரச அச்சகம் உள்ளபோதிலும், பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தனியார் பிரிவினருக்கு வழங்கப்பட்டமை குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதா கிருஷ்ணனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
அமைச்சரவையின் அனுமதியுடனேயே பெருமளவான புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகள் தனியார் பிரிவினருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
கேள்விமனுவை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், உரிய தரத்தில் பாடசாலை புத்தகங்களை அச்சிடாத நிறுவனங்களின் தயாரிப்புகள் நிராகரிக்கப்படும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் கூறினார்.