வைத்தியசாலையில் குழந்தை மரணித்தமை குறித்து விசாரணை

கலஹா வைத்தியசாலையில் குழந்தை மரணித்தமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 29-08-2018 | 9:44 PM
Colombo (News 1st)  கண்டி - கலஹா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (28) அமைதியின்மை ஏற்பட்டமைக்கு காரணமான குழந்தையின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடும் காய்ச்சலினால் நேற்று முற்பகல் கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சீவன் என்ற குழந்தை, அந்த வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் சஞ்சீவன் மூன்றாவது குழந்தை. சஞ்சீவனின் தந்தை ஒரு வியாபாரி என்பதுடன், தாய் குழந்தைகளை பராமரிக்கும் இடமொன்றில் தொழில்புரிகின்றார். கடும் காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்காமையினால் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று கலஹா பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கம்பளை, கலஹா, பேராதனை, நாவலப்பிட்டிய மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட 10 பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். 8 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வௌியே வரமுடியால் இருந்த (குழந்தைக்கு சிகிச்சை அளித்த) வைத்தியருக்கு பொலிஸ் சீருடை அணிவித்து வௌியே அழைத்துவர பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட வைத்தியர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இன்று மதியம் வௌியேறியுள்ளார். தெல்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலஹா வைத்தியசாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் அடங்கிய வைத்தியசாலை ஊழியர்கள் அங்கு பணியாற்றுகின்றனர். நேற்று குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவர் கடமையில் இருந்துள்ளனர். குழந்தை உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமையினால் தற்போது வைத்தியசாலையில் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. வைத்தியசாலையின் பாதுகாப்பிற்காக கலஹா மற்றும் கம்பளை பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.