இலங்கையின் பதக்கவாய்ப்பை தீர்மானிக்கும் இறுதிநாள்

இலங்கையின் பதக்க வாய்ப்பைத் தீர்மானிக்கும் இறுதிநாள்

by Staff Writer 29-08-2018 | 8:38 AM
பதினெட்டாவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் பதக்க வாய்ப்பைத் தீர்மானிக்கும் இறுதிநாள் இன்றாகும். 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு விழாவில் இலங்கையால் இதுவரை ஒரு பதக்கத்தையேனும் வெல்ல முடியவில்லை. ஆசியாவின் ஒலிம்பிக் விழாவாக வர்ணிக்கப்படும் ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் அதிசிறப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு விழாவில் இன்றைய தினம் போட்டிகள் நடைபெறும் 11 ஆவது நாளாகும். கடந்த 10 நாட்களில் இலங்கை சார்பாக 173 வீர, வீராங்கனைகள் போட்டியிட்ட போதிலும் அவர்களால் ஒரு பதக்கத்தையேனும் வெல்ல முடியவில்லை. எவ்வாறாயினும், குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வெற்றி கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பமாக இன்றைய தினம் அமைந்துள்ளது. ஆடவருக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டத்தின் முதல் சுற்று இன்று (29) மாலை 6.45 மணியளவில் நடைபெறவுள்ளது. இதேவேளை, ஆசிய விளையாட்டு விழாவில் 4 x 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த பஹ்ரேன் குழாம், போட்டியை 3 நிமிடங்கள் 11.89 செக்கன்களில் பூர்த்தி செய்தார்கள். மகளிருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற சல்வா நசேர், பஹ்ரெய்ன் குழாத்தில் இடம்பெற்றதுடன் இதற்கமைய இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அவர் 2 தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டார். இந்திய குழாம் வெள்ளிப்பதக்கத்தையும் கஸக்ஸ்தான் குழாம் வெண்கலப்பதக்கத்தையும் வென்றன. பட்மிண்டன் போட்டிகளில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தோனேஷியாவின் கிறிஸ்ட் ஜொனதன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இறுதிப் போட்டியில் அவர் 2 - 1 எனும் கணக்கில் சைனிஸ் தாய்பேவின் ஷோ டியென்ச்சை தோற்கடித்தார். விளையாட்டு விழாவில் பதக்கப்பட்டியலில் 97 தங்கம், 64 வெள்ளி, 45 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 206 பதக்கங்களை வென்றுள்ள சீனா முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது. ஜப்பான் 43 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் கொரியா 32 பதக்கங்களுடன் மூன்றாமிடத்திலும் இருப்பதுடன் இந்தியா 9 தங்கம் உட்பட 50 பதக்கங்களுடன் எட்டாமிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.