மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக் கழிவுகளை மாந்தீவில் எரிக்க மக்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக் கழிவுகளை மாந்தீவில் எரிக்க மக்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக் கழிவுகளை மாந்தீவில் எரிக்க மக்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2018 | 9:12 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளனர் .

கடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் மண்முனை வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் கொட்டப்பட்டு வந்தன.

மண்முனை பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வௌயிட்டு வந்ததையடுத்து அங்கு கழிவுகள் கொட்டப்படுவது நிறுதப்பட்டது.

இதனையடுத்து, வைத்தியசாலைக் கழிவுகள் கடந்த சில வாரங்களாக வவுணதீவு வரை லொறியில் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் படகில் மாந்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், நேற்று (28) மாந்தீவு பகுதியில் வைத்தியசாலைக் கழிவுகளை கொண்டு சென்ற போது வவுணதீவு மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கலா ரஞ்சனி கணேசலிங்கத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

திராய்மடு பகுதியில் இதுவரை கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், கழிவுகள் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்காமையினால் மாந்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாந்தீவு பகுதியில் உள்ள கட்டிடங்கள் இயங்காமல் காணப்படுவதினால் அங்கு காணப்படுகின்ற தொழுநோயாளர் வைத்தியசாலை கட்டிடத்தில் உக்காத கழிவுகள் வைக்கப்படுவதாக டொக்டர் கலா ரஞ்சனி தெரிவித்தார்.

மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியாலையின் குப்பைகளே கடந்த காலங்களில் எரியூட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம். தயாபரனிடம் வினவியபோது, இது தொடர்பில் தமக்கு எவ்வித அறிவித்தல்களும் கிடைக்கவில்லை என பதிலளித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்