18 வயதின் பின்னர் சிறுவர் இல்ல பிள்ளைகளின் நிலை

18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளின் நிலை என்ன?

by Bella Dalima 28-08-2018 | 10:20 PM
Colombo (News 1st) 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளின் நிலை என்னவாகும் என்பது தொடர்பில் வடக்கு, கிழக்கிலுள்ள சில சிறுவர் இல்லங்களில் நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது. SAVE OUR SOCIETY சிறுவர் கிராமம் 2013 ஆம் ஆண்டு முதல் யாழ் - நாயன்மார்க்கட்டில் செயற்பட்டு வரும் சர்வதேச சிறுவர் இல்லமாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், சமூகத்தில் ஆதரவின்றித் தவிக்கும் பிள்ளைகளுக்காக ஒஸ்ரியாவில் SAVE OUR SOCIETY சிறுவர் இல்லம் ஸ்தாபிக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் ஆதரவற்ற சிறுவர்களை பராமரித்து வரும் இந்த அமைப்பு, இலங்கையில் யாழ்ப்பாணம், நுவரெலியா, காலி,மொனராகலை, அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்த சிறுவர் கிராமத்தில் 121 பேர் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பெற்றோருடனுள்ள பிள்ளையொன்று சமூகத்தில் எவ்வாறு வாழுமோ, அவ்வாறானவொரு கட்டமைப்பொன்றின் ஊடாக இங்குள்ள பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். இந்த சிறுவர் கிராமத்தில் தனியான வீடுகள் அமைக்கப்பட்டு, சுமார் 10 பிள்ளைகள் ஒரு வீட்டில் வாழ்வதுடன், இவர்களை பராமரிப்பதற்கு தாய் ஒருவருமுள்ளார். 14 வயதை பூர்த்தி செய்யும் ஆண் பிள்ளைகள், சிறுவர் கிராமத்திலுள்ள இளைஞர் விடுதியில் பராமரிக்கப்படுகின்றனர். இங்குள்ள சிறுவர்கள் உயர் கல்வியை முடித்த பின்னர், அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழிற்துறைசார் பயிற்சிகளை வழங்கி, சமூகத்துடன் இணைக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள SAVE OUR SOCIETY சிறுவர் கிராமத்தின் இயக்குநர் செல்வராஜா பத்மராஜா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அவர்கள் தமக்கான குடும்பத்தை உருவாக்கும் காலம் வரையில் தமது பராமரிப்பு சேவை தொடர்வதாக அவர் கூறினார். இவ்வாறு சிறுவர் இல்லத்தில் குடும்பத்தில் வாழ்வதைப் போன்ற வசதிகளை அனுபவித்த பின்னர், வௌியில் சென்று வாழும் பலர் நல்ல நிலையில் இருப்பதாக SAVE OUR SOCIETY சிறுவர் இல்லத்தில் வாழும் சிவராசா சசிகலா தெரிவித்தார். இதேவேளை, இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தினால் கிளிநொச்சி நகரிலுள்ள கருணா நிலையம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 1955 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இல்லத்தில் தற்போது 19 பெண் பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அங்குள்ள பிள்ளைகளும் சொந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டு செல்லும் வரை தமது சேவைகளையும் கண்காணிப்பையும் தொடர்ந்து முன்னெடுப்பதாக கருணா நிலையத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை S.K. டேனியல் குறிப்பிட்டார். அம்பாறை - சம்மாந்துறை - வீரமுனை ஶ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினால் ஶ்ரீபாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு பெற்றோர்களற்ற 17 ஆண் பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
எங்களுடைய இல்லமானது பொதுமக்களின் அன்பளிப்பில் தங்கியிருக்கும் இல்லமாகும். எங்களுடைய இல்லத்தில் இருந்து கல்வி கற்று வீடு சென்ற பின்னும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் செய்து வருகின்றோம். கணினி வகுப்பு , ஆங்கில வகுப்பு போன்றவற்றிற்கான நிதி உதவிகளையும் நாங்கள் செய்து வருகின்றோம். இது தவிர தொழில்களை செய்யக்கூடிய வகையிலே தற்போது குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களையும் நாங்கள் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். அவர்கள் சமூகத்தில் நல்ல பண்புள்ளவர்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் வாழ்வதை எங்களுக்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
என ஶ்ரீபாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் தா.விநாயகமூர்த்தி குறிப்பிட்டார். 18 வயதை பூர்த்தி செய்த ஆதரவற்ற பிள்ளைகள் சமூகத்தில் சிறந்த நிலைக்கு செல்லும் வரை, அவர்கள் தொடர்பில் சிறுவர் இல்லங்கள் கரிசனை செலுத்துகின்றமை மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.