இலங்கை குப்பைத் தொட்டியாகுமா?

சிங்கப்பூருடனான வர்த்தக உடன்படிக்கையால் இலங்கை குப்பைத் தொட்டியாகுமா?

by Bella Dalima 28-08-2018 | 9:22 PM
Colombo (News 1st)  சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கை ஊடாக எந்த வகையிலும் வேறு நாடுகளின் கழிவுகள் கொண்டுவரப்பட மாட்டாது என சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அமைச்சர் உள்ளிட்ட உடன்படிக்கையை தயாரித்தவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இலங்கை வர்த்தக திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கோமி சேனாதீர, சிங்கப்பூர் இலங்கை உடன்படிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை ஊடாக ஏனைய நாடுகளின் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை எவ்விதத் தடையுமின்றி இலங்கைக்கு கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ''The Island'' பத்திரிகையும் செய்தி வௌியிட்டிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து, நாட்டில் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட போதிலும் வேறு நாடுகளில் இருந்து கழிவுகளை நாட்டிற்கு கொண்டுவரத் தயாரில்லை என சர்வதேச வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு பல்வேறு வகையான கழிவுகளை எவ்விதத் தடையுமின்றி இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உடன்படிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் கலந்துரையாடலுக்காக தொழில் வல்லுநர்கள் அழைக்கப்படவில்லையென ஒன்றிணைந்த தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்புலத்தில் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சிங்கப்பூரின் வௌிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலச்சந்திரனுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை-சிங்கப்பூர் உடன்படிக்கை ஊடாக இரண்டு நாடுகளுக்கும் சமமான விதத்தில் நிவாரணம் கிடைப்பதாக அமைச்சு தொடர்ந்தும் கூறிவருகின்றது. உடன்படிக்கை மூலம் ஏழாயிரத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு வரி நிவாரணம் கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் பட்டியலில் முதற்பக்கத்தில் முதல் 10 பொருட்களைப் பார்க்கும் போது, இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு கழுதைகளையும், மாடுகளையும் ஏற்றுமதி செய்வதற்கு வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன் மூலம் இலங்கையில் கழுதைகளும், மாடுகளும் அதிகரித்துள்ளதாகவே குறிப்பிடப்படுகிறது.