கலஹா வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குழந்தை உயிரிழந்ததால் கலஹா வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்: பாதுகாப்புக் கடமையில் பொலிஸார்

by Staff Writer 28-08-2018 | 9:30 PM
Colombo (News 1st)  கண்டி - கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததை அடுத்து, வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று, கண்டி - கலஹா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகளை வழங்கியதன் பின்னர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு வைத்தியரால் சிகிச்சையளிக்கப்பட்டதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்தி சமரசிங்க தெரிவித்தார். இதனிடையே குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் கோபமடைந்த பிரதேச மக்கள் வைத்தியரின் வாகனத்திற்கும் வைத்தியசாலைக்கும் சேதம் விளைவித்ததாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவியது. வைத்தியசாலையின் சுமார் 500 மீட்டர் வரையான வளாகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலைக் கட்டிடத்திற்கும் வாகனங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வைத்தியசாலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இருவர் கண்டி கலஹா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கலஹா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்தி சமரசிங்க தெரிவித்தார்.