by Staff Writer 27-08-2018 | 6:25 PM
Colombo (News 1st) முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த தனது 77 ஆவது வயதில் இன்று (27) காலமானார்.
கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அன்னார் காலமானதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
1941 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி பிறந்த அன்னார், 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டார்.
லண்டனிலுள்ள சன்டிஸ்ஹர் இராணுவ ரோயல் கல்லூரியில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்த ரோஹான் தலுவத்த, யாழ். நகரில் எல்.ரி.ரி.ஏ க்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ரிவிசுர நடவடிக்கைக்கு தலைமைதாங்கினார்.
1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை இராணுவத் தளபதியாக செயற்பட்ட ரோஹான் தலுவத்த, 1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்டவராவார்.
அத்தோடு, இலங்கை இராணுவத்தில் ஆற்றிய சேவை காரணமாக பிரேஸிலுக்கான இலங்கை தூதுவராகவும் அவர் செயற்பட்டார்.
ஜெனரல் ரோஹான் தலுவத்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை பொரளை மயானத்தில் முழு இராணுவ மரியாதையுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.