அமல் கருணாசேகரவிடம் மீண்டும் வாக்குமூலம்

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமையதிகாரி அமல் கருணாசேகரவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு

by Staff Writer 27-08-2018 | 8:27 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கல்சிசை நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. தொம்பே, பதுவத்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பு முகாம் தொடர்பில் சட்டத்தரணி கூறிய விடயத்திற்கமைய, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்தது. கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு கல்கிசை மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தெரிவித்துள்ள கருத்து குறித்து, அரச சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம இதன்போது மீண்டும் விசாரித்தார். இந்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாக ஞாபகமில்லை என்ற சந்தேநகநபரின் கருத்தில் சிக்கல் நிலவுவதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்தார். பொறுப்பு வாய்ந்த பதவியை வகித்து இவ்வாறான கருத்தைத் தெரிவிக்கின்றமை பிரச்சினைக்குரியது எனவும் கருணாசேகர தமது கடமையை நிறைவேற்றிய விதம் தொடர்பில் வேறாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி குறிப்பிட்டார். தொம்பே - பதுவத்த பாதுகாப்பு முகாம், இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்டதாக தமது கட்சிக்காரர், புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவிருந்தபோது அறிந்திருந்ததாக இதன்போது பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ஷெஹான் டி சில்வா மன்றில் குறிப்பிட்டார். அந்த பாதுகாப்பு முகாமில் கீத் நொயார் தடுத்துவைக்கப்பட்டதாக சந்தேகிக்கும் குற்றவியல் விசாரணை திணைக்களம் அது தொடர்பில் மன்றில் இதற்கு முன்னர் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அமல் கருணாசேனவின் சட்டத்தரணி இன்று குறித்த பாதுகாப்பு வீடு தொடர்பில் தமது கட்சிக்காரர் அறிந்திருந்தமையை உறுதிப்படுத்தும் வகையில் தெரிவித்த கருத்தை பதிவு செய்யுமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார். தாம் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி தெரிவிக்க முயன்றதுடன், மேஜர் புளத்வத்த என்பவர் இந்த முகாமை நடத்திச்சென்றதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி தமது தெளிவுபடுத்தலின்போது குறிப்பிட்டார். மேஜர் புளத்வத்த என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார். விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், இன்று மன்றில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். இதேவேளை, ராஜபக்ஸவின் வாக்குமூலம் சரியாக வெளிப்படாத வகையில் சில பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பிரசுரித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கனேஷ் தர்மவர்தன மன்றில் குறிப்பிட்டார். ராஜபக்ஸவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார். இந்தநிலையில், பதுவத்த பாதுகாப்பு முகாம் தொடர்பில், குற்றவியல் விசாரணைத் திணைக்களம், தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் கோரியுள்ள தகவல்களை வழங்குவதற்கு முன்வராவிடின் நீதிமன்ற உத்தரவிற்கமைய செயற்படுமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபரான அமல் கருணாசேகரவை எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.