அபிவிருத்திப் பணிகளில் எவ்வித பாகுபாடும் இல்லை

நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் எவ்வித பாகுபாடும் இல்லை - ஜனாதிபதி

by Staff Writer 27-08-2018 | 8:13 PM
Colombo (News 1st) நாட்டின் அபிவிருத்திப் பணிகளின்போது எவ்வித பாகுபாடும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி 2ஆவது தடவையாக இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. வடக்கு, கிழக்டகு மாகாண மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். மன்னார் மடு திருத்தலத்திற்கான குடிநீர் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபிவிருத்திப் பணிகள், வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் அபிவிருத்திப் பணிகள், ஆனையிறவு உப்பள அபிவிருத்தி, அச்சுவேலி தொழிற்பேட்டை ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் வன்முறை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் ஒழிப்புக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். வீடமைப்பு, நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முப்படையினர் விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.