இலங்கை - பங்களாதேஷ் உறவை பலப்படுத்துவதற்கு நடைமுறை

இலங்கை - பங்களாதேஷ் உறவை பலப்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - பிரதமர்

by Staff Writer 27-08-2018 | 10:36 PM
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக செயற்பாட்டு ரீதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நடைபெற்ற இந்துமா சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், பங்களாதேஷ் திட்டமிடல் அமைச்சரை சந்தித்தபோது இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பங்களாதேஷ் திட்டமிடல் அமைச்சர் ஏ.எச்.எம். முஸ்தபா கமல் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமரின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு பங்களாதேஷ் திட்டமிடல் அமைச்சர் இதன்போது பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பங்களாதேஷின் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு துலிப் மென்டிஸ் உள்ளிட்ட இலங்கை வீரர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பங்களாதேஷ் அமைச்சர் நன்றி கூறியதாகவும் பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் செயற்பாட்டு ரீதியிலான திட்டமொன்றை தயாரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.