சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 26-08-2018 | 6:47 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பாராளுமன்றத்தில் நேற்று (25), எல்லை நிர்ணய அறிக்கை மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைசர் முஸ்தபாவே, இந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தமை கவலைக்குரிய விடயம். 02. பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் தாயகம் திரும்பவுள்ளனர். 03. மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக, பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 04. மக்கள் சக்தி வீபோர்ஸின் 2ஆம் கட்டப் பணியாக நேற்று, நீர்கொழும்பு - முஹாந்திரம்பிட்டி களப்பு சுத்தப்படுத்தப்பட்டது. இதில் பெருந்திரளான தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 05. வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இந்த கைதி உயிரிழந்திருக்கக் கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். வௌிநாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தானில் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதிகள், செனட் தலைவர்கள் மற்றும் ஏனைய அரசாங்க உயர் அதிகாரிகள் சர்வதேச விமானங்களில் முதல் வகுப்புக் கட்டணத்தில் பயணம் செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. 02. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சிக்கி பேரழிவை சந்தித்து மெல்ல மீண்டு வரும் கேரள மாநிலத்திற்கு 7 கோடி (இந்திய) ரூபா நிவாரணம் வழங்குவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் ஜனக பிரசாத் விமலசிறி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதோடு, ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அருண தர்ஷன மற்றும் காலிங்க குமாரகே ஆகிய இருவரும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.