காதல் நட்பு அதிரடி என அசத்தும் செக்கச்சிவந்த வானம்

காதல், நட்பு, அதிரடி என அசத்தும் செக்கச் சிவந்த வானம்

by Bella Dalima 25-08-2018 | 5:54 PM
மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. செக்கச்சிவந்த வானம் படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் மாபெரும் தொழிலதிபராக வருகிறார். அவரது மூன்று மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் தனது அப்பாவின் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். மறுமுனையில் பொலிஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, தனது நண்பரான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ் ராஜின் இடத்தைப் பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாகத் தெரிகிறது. காரசாரமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானா எரப்பாவும் வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசையுடன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28 ஆம் திகதி வௌியாகவுள்ளது.