by Bella Dalima 25-08-2018 | 5:16 PM
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சிக்கி பேரழிவை சந்தித்து மெல்ல மீண்டு வரும் கேரள மாநிலத்திற்கு 7 கோடி (இந்திய) ரூபா நிவாரணம் வழங்குவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
“கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் மனமுடைந்து போனோம். அப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்திற்கு 7 கோடி ரூபா வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள் மற்றும் பாடசாலைகளை நிர்மாணிக்க உதவியாக இருக்கும்,”
என அப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கேரளாவிற்கு மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் 4.25 கோடி ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரளாவில் நிவாரண மற்றும் சுகாதாரப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினருடன் UNICEF அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தனது, ''பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுன்டேசன்'' மூலம் கேரளாவின் மறுசீரமைப்பிற்காக 6 இலட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 4.25 கோடி இந்திய ரூபா) நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகையை UNICEF அமைப்பிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.