வவுனியா புதிய பஸ் நிலையத்தில் மீண்டுமொரு பிரச்சினை

195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா புதிய பஸ் நிலையத்தில் மீண்டுமொரு பிரச்சினை

by Staff Writer 24-08-2018 | 5:34 PM
Colombo (News 1st) பல்வேறு சிக்கல்களுக்கு பின்னர் இயங்க ஆரம்பித்த வவுனியா புதிய பஸ் நிலையத்தில் தற்போது மற்றுமொரு பிரச்சினை தோன்றியுள்ளது. 195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா புதிய பஸ் நிலையம் 2017 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து பல மாதங்களாக இந்த பஸ் நிலையம் பயன்பாடின்றிக் காணப்பட்டது. தற்போது பிரச்சினையின்றி பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், உரிய வகையில் திட்டமிட்டு பஸ் நிலைய மலசலக்கூட கட்டமைப்பை நிர்மாணிக்காமையால், கழிவுநீர் வௌியேறி வருகின்றது. இதனால் பஸ் ஊழியர்கள் மாத்திரமின்றி பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படும் வவுனியா பஸ் நிலையத்தின் மலசலக்கூட கட்டமைப்பு தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மலசலக்கூடத்தில் இருந்து வௌியேறும் கழிவு நீரை, மலசலக்கூட கட்டமைப்பை குத்தகைக்குப் பெற்றவர்கள் பிரதான வடிகாணில் வெளியேற்றுவதால் ஏ9 வீதிக்கு இருமருங்கிலும் காணப்படும் வடிகாண்களில் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. மலசலக்கூட கட்டமைப்பில் இருந்து வௌியேறும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, வவுனியா புதிய பஸ் நிலையத்தை வவுனியா நகர சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் சென்று பார்வையிட்டனர். இதன்போது மலசலக்கூடத்தை இன்று முதல் பயன்படுத்தக்கூடாது என வவுனியா நகர சபைத் தலைவர் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

ஏனைய செய்திகள்