மக்கள் சக்தி 3ஆம் கட்டம் ஆரம்பமாகிறது

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 3 ஆம் கட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

by Staff Writer 24-08-2018 | 10:33 PM
Colombo (News 1st) மக்களின் பிரச்சினைகளை ஆராயும் ''மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்'' செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்றிட்டம் தொடர்பில் சர்வமதத் தலைவர்களை தௌிவுபடுத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் வேலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு இன்று காலை விளக்கமளிக்கப்பட்டது. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலாநிதி திலக் பண்டார மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உள்ளிட்ட நியூஸ்ஃபெஸ்ட் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சிவஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியாரை சந்தித்து நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்று மாலை ஆசி பெற்றனர். இதேவேளை, நியூஸ்ஃபெஸ்ட் அதிகாரிகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி அஷ்ஷேய்ஹ் எச். சஜீரையும் சந்தித்து தெளிவுபடுத்தினர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இம்முறையும் பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.