நெல் மாஃபியாவிற்கு காரணமானவர்கள் யார்?

நெல் மாஃபியாவிற்கு காரணமானவர்கள் யார்: ஜனாதிபதி விளக்கம்

by Bella Dalima 24-08-2018 | 3:57 PM
Colombo (News 1st)  நெல் விநியோக சபையை அகற்ற பிரேரணை கொண்டு வந்தவர்களும் மீண்டும் நெல் விநியோக சபை உயிர் பெறும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடையாக செயற்பட்டவர்களுமே நெல் மாஃபியாவிற்கு காரணமானவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து அதி உயர் விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதற்கு நெல் கொள்வனவு சபை பாரிய பங்களிப்பை செய்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
1993 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தின் போது நெல் விநியோக சபை மூடப்பட்டது. சந்திரிக்கா பண்டாராநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் 2000 ஆம் ஆண்டு நெல் விநியோக சபையை இரத்து செய்வதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தனர். அப்போது விவசாய அமைச்சராக தி.மு ஜயரத்ன செயற்பட்டார். நெல் விநியோக சபையை இரத்து செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு பிரேரணையை கொண்டுவந்த போது நான் அமைச்சராக இருந்தேன். என்னுடன் சேர்ந்து 18 பேர் இந்த பிரேரணையை எதிர்த்தோம். அப்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை தோற்கடித்து , நெல் விநியோக சபையை நாம் பாதுகாத்தோம். எனினும், நெல் விநியோக சபை இயங்கவில்லை. 2004 ஆம் ஆண்டு மீண்டும் புதிய அரசாங்கத்தை நாம் உருவாக்கினோம். 2006 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற நான் மீண்டும் நெல் விநியோக சபையை வலுப்படுத்தினேன், எனினும், அப்போதிருந்த பெரிய மனிதர்கள் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தடையாக செயற்பட்டனர். அவர்களே தற்போது நெல் மாஃபியா தொடர்பில் பேசுகின்றனர்.
என ஜனாதிபதி கூறினார். வட மேல் மாகாணத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. பொல்பித்திகம கும்புக்குலாவ குளத்திற்கு அருகில் இந்த திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தபோதே ஜனாதிபதி இந்த விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.