அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள செயலணியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை: சி.வி. விக்னேஷ்வரன்

அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள செயலணியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை: சி.வி. விக்னேஷ்வரன்

அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள செயலணியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை: சி.வி. விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2018 | 9:39 pm

Colombo (News 1st) தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் பணத்தையும் மாத்திரமே தமிழ் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ளாமையால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை உடனே வழங்க வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தி வருவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை பெற்றுக்கொடுப்பது தற்போதைக்கு முக்கியமான ஒன்றில்லை எனவும் அவர் கூறிவருவதாக சி.வி. விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக அரசியல் தீர்வுக்கு அவர் வழங்கும் முக்கியத்துவம் புலனாவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்திற்கு பலம் சேர்ப்பதற்கே, ஜனாதிபதி செயலணியில் 16 உறுப்பினர்களும் பங்கேற்காது அரசியல் தீர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்துமாறு தான் அறியப்படுத்தியதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எனினும், தனது கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செயலணிக்கு செல்லாது, முதலில் அரசியல் தீர்வு, அதன் பின்னர் தான் பொருளாதார நன்மைகள் என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கூற முன்வர வேண்டும் எனவும் விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

இவ்வாறு செயற்படும் பட்சத்தில் அரசாங்கம் சர்வதேச கண்டனங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயலணியின் பணிகளை மேற்கொள்வதற்கு அதில் பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் சி.வி.விக்னே‌ஷ்வரன் தனது அறிக்கையூடாக தௌிவுபடுத்தியுள்ளார்.

இராணுவத்தினருடன் இணைந்து செயலணியில் பங்குபற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்கும் போது, அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை வலியுறுத்த முடியும் எனவும், பொருளாதார அபிவிருத்திக்கு அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தை அரசியல் தீர்வுக்கு வழங்கவில்லை என உலகறியச் செய்ய முடியும் எனவும் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் பிரதிநிதிகள் இணைந்து செயற்பட்டால் எமது ஒற்றுமை வௌிப்படுத்தப்படும் எனவும், இராணுவத்தினர் மக்கள் முன்னேற்றத்தில் ஈடுபடுவதைக் கண்டிக்க முடியும் எனவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செயலணிக்கு செல்லாமலே மக்களின் பொருளாதார விருத்தியை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்