நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 1000 கோடி கடனுதவி

நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை செலுத்தாத நிறுவனம் 1000 கோடி ரூபா கடன் பெறத் தகுதி பெற்றது எவ்வாறு?

by Bella Dalima 23-08-2018 | 8:23 PM
Colombo (News 1st)  மக்கள் வங்கி பணிப்பாளர் ஒருவர், தாம் பணிப்பாளராக செயற்படும் Walkers நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது. ஜெஹான் அமரதுங்க என்ற நபர் பணிப்பாளராக செயற்படும், MTD Walkers நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனமொன்று அரசாங்கத்திற்கு 34 இலட்சம் ரூபா குத்தகைப் பணத்தை செலுத்தாதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாவது,
CML Walkers நிறுவனத்திற்கே முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியுள்ளனர். அது Walkers Colombo Shipyard (private) Limited எனும் நிறுவனமாகும். இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் நிதி முகாமையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். Walkers Colombo Shipyard (private) Limited நிறுவனம் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஜூன் மாதம் வரை இலங்கை மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாதுள்ளது. 34 இலட்சம் ரூபா குத்தகைப் பணத்தை அவ்வாறு செலுத்தாதுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் அடுத்த வாரம் நாம் முறைப்பாடு செய்யவுள்ளோம்.
பணிப்பாளர்கள் தாம் பதவி வகிக்கும் வங்கிகளில் கடனைப் பெறுவதில் எவ்வித இடையூறும் இல்லை என இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது மத்திய வங்கி ஆளுனர் கூறினார். எனினும், அந்த கடனை பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணையொன்று அவசியம். கடனை மீள செலுத்தும் இயலுமையுள்ளதா என ஆராய வேண்டியதும் அவசியமாகும். 34 இலட்சம் ரூபா அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதுடன், 2015 ஆம் ஆண்டு முதல் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை செலுத்தாத நிறுவனம், 1000 கோடி கடன் பெறுவதற்கு எவ்வாறு தகுதியுடையதாக இருக்க முடியும்?