சம்பளப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் தோல்வி

ஜனாதிபதியுடனான ரயில்வே தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வி

by Staff Writer 23-08-2018 | 10:24 PM
Colombo (News 1st)  ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு கலாநிதி சரத் அமுணுகம தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு ஏற்படுத்திய இணக்கப்பாடுகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்து, ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் இடைக்கிடையே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். ஜனாதிபதி தலையீடு செய்து பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதியளித்தமைக்கு அமைய, கடந்த 8 ஆம் திகதி முன் அறிவித்தல் இன்றி ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையிலும் வௌியிடங்களிலும் கடும் எதிர்ப்பை வௌியிட்டார். இதனால் ஏனைய துறைகளிலும் இந்த சம்பள முரண்பாடு ஏற்படக்கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரச பிரிவின் சம்பளத்தை மீளாய்வு செய்து, தேசிய சம்பள கொள்கையொன்றை தயாரிப்பதற்கான ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசேட ஆணைக்குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, சுகாதாரம், உயர் கல்வி, தபால் ஆகிய துறைகளின் சம்பள முரண்பாட்டைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது.