வாழ்நாளில் ஒன்றரை வருடங்களை இழக்கும் இந்தியர்கள்

காற்று மாசுபாட்டால் சராசரி வாழ்நாளில் ஒன்றரை வருடங்களை இழக்கும் இந்தியர்கள்

by Bella Dalima 23-08-2018 | 3:56 PM
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் சராசரி வாழ்நாள் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் குறைவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சூழலுக்கு பாரிய தீங்கினை விளைவிக்கும் காற்று மாசு மனிதர்களின் வாழ்நாளையும் குறைப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2.5 மைக்ரோன்கள் அளவிற்கு சிறிய துகள்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இந்த சிறிய துகள்கள் நுரையீரல்களுக்குள் ஆழமாய் சென்று மாரடைப்புகள், பக்கவாதங்கள், சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்களை உருவாக்கும் அளவிற்கு ஆபத்தானவை. இந்த துகள்கள் மின் உலைகள், கார்கள், கனரக வாகனங்கள், நெருப்பு, வேளாண் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் உருவாகின்றன. இதனால் பெரிய அளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ள வங்காளதேசம் (1.87 ஆண்டுகள்), எகிப்து (1.85 ஆண்டுகள்), பாகிஸ்தான் (1.56 ஆண்டுகள்), சவுதி அரேபியா (1.48 ஆண்டுகள்), நைஜீரியா (1.28 ஆண்டுகள்) மற்றும் சீனா (1.25 ஆண்டுகள்) ஆகிய நாடுகளில் வாழ்நாளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி இந்தியாவில் 1.53 ஆண்டுகள் வாழ்நாள் பாதிப்பு ஏற்படுகிறது. ஆசியாவில் காற்று மாசுபாடுகளால் ஏற்படும் உயிரிழப்பு ஆபத்து குறைக்கப்படும் என்றால், 60 வருடங்கள் வாழக்கூடிய ஒருவர் 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக 85 அல்லது அதற்கு மேல் வாழ முடியும் என ஆய்வின் தலைவர் ஜோசுவா ஆப்தே தெரிவித்துள்ளார்.