அர்ஜூன மகேந்திரன் மீதான பிடியாணைக்கு என்ன நேர்ந்தது: அறிக்கையிடுமாறு நீதவான் உத்தரவு
by Staff Writer 23-08-2018 | 9:21 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கையிடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டுமென கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன அறிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
தமக்கெதிரான குற்றசாட்டுகளுக்குரிய ஆதாரங்கள் மற்றும் பிடியாணை ஆகியவற்றை சிங்கப்பூர் சர்வதேச பொலிஸாரினூடாக அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் அர்ஜூன மகேந்திரன் கோரிக்கை விடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜெயசுந்தர நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த கோரிக்கை சட்டரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் ஒரு பில்லியன் ரூபா நிதியை மீள செலுத்துமாறு இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிடுமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்ட மா அதிபர் திணைக்களம் மன்றில் தெரிவித்துள்ளது.
முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் போர்வையில் தமது நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முயற்சிப்பதாக W.M. மென்டிஸ் நிறுவனம் சார்பில் இன்று மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நிறுவனத்தினதும் தனிப்பட்ட இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் தேவை விசாரணை அதிகாரிகளுக்கு இல்லையென சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறிகள் மோசடியினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்படும் தனிப்பட்ட தகவல்கள் வௌியிடப்பட மாட்டாது எனவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான விசாரணைகளை நடத்துவதற்கான உரிமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் காணப்படுவதாகவும் W.M. மென்டிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணி குறிப்பிடும் தகவல்களுக்கு மேலாக மிக ஆழமான வகையில் இரகசிய தகவல்களை விசாரணை செய்வதற்கான உரிமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு காணப்படுவதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.
இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.