ரசிகர்கள் மூலம் கேரளாவிற்கு நிவாரணம் வழங்கிய விஜய்

ரசிகர்கள் மூலம் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிய விஜய்

by Bella Dalima 22-08-2018 | 4:34 PM
மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ, தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் 45 இலட்சம் (இந்திய ரூபா) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 15 மாவட்ட ரசிகர்மன்ற பொறுப்பாளர்களுக்கு தலா 3 இலட்சம் (இந்திய ரூபா) அனுப்பிவைத்துள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் தேவையான நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நிவாரணப் பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களிலிருந்து 15 லொறிகள் மூலமாக கேரளாவிற்கு கொண்டுசெல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மாவு, ரவை, மைதா, ஆடைகள், போர்வைகள், பெட்சீட், பால் மா, நாப்கின்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளால் நேரடியாக வழங்கப்படுகிறது. கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கிற்கும் விஜய் நிதி அனுப்பியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேரள வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு அங்கு தேவையான பொருட்களை வாங்கி வழங்குவதோடு, உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வரிவிலக்கு பெறுவதற்காக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியை அரசிடம் முறைப்படி வழங்கி வருகிறார்கள். ஆனால், அதை விரும்பாத விஜய் நேரடியாக ரசிகர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்கள் மூலம் உதவி வருகிறார்.