மயிலிட்டி துறைமுக புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்
by Bella Dalima 22-08-2018 | 9:26 PM
Colombo (News 1st) மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்யும் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (22) ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வு மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் நடைபெற்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு செயலிழந்த யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை துரிதகதியில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டி துறைமுகத்தில் 40 கோடி ரூபா செலவில் 2 கட்டங்களாக நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உயர் பாதுகாப்புவலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதி, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
யுத்தத்திற்கு முன்னர் இலங்கை மீன்பிடி உற்பத்தியில் மயிலிட்டி துறைமுகம் 30 வீதத்திற்கு மேல் பங்களிப்பு செய்துள்ளது.
1979 ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் வட பகுதியில் 35 தொடக்கம் 41 வீதமான மீன்கள் பிடிக்கப்பட்டன. அதில் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த துறைமுகத்தின் செயலிழப்பு வட மாகாணத்திற்கும் தேசிய உற்பத்திக்கும் பாரிய பாதிப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.