மன்னாரில் 90 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு

by Staff Writer 22-08-2018 | 8:04 PM
Colombo (News 1st)  மன்னார் மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த இடத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னார் - எமில்நகர் பகுதி வீடு ஒன்றில் கொட்டப்பட்டபோது அதில் மனித எச்சங்கள் இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் சிலரும், தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 90 மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்குகின்றன. சடலங்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டார். அகழ்வின் பின்னர் இது தொடர்பான பூரண அறிக்கையை மன்னார் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ கூறினார்.