கடன் வழங்கி இலாபம் பெற முயற்சி

கிராமப்புற மக்களுக்கு கடன் வழங்கி பணப்புழக்கத்தை அதிகரித்து அரசியல் இலாபம் பெற முயற்சி?

by Bella Dalima 22-08-2018 | 7:02 PM
Colombo (News 1st)  தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மத்திய வங்கி முதல் சமுர்த்தி வங்கி வரையில் வங்கித்துறையில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரிகள் சிலர் நாட்டின் வங்கித்துறை அதிகாரிகள் சிலரை அழைத்து கலந்துரையாடியமை குறித்து 'டெய்லி மிரர்' பத்திரிகை நேற்று (21) செய்தி வெளியிட்டிருந்தது. பிரதமரின் ஆலோசகரான ஆர். பாஸ்கரலிங்கம் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட சில அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது, வங்கிகளினூடாக வருடாந்தம் வழங்கப்படும் தங்காபரணங்களுக்கான அடகுக் கடனின் அளவினை அரை ட்ரில்லியன் ரூபா அதாவது 500 பில்லியன் ரூபாவால் அதிகரிக்குமாறு பாஸ்கரலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். கிராம மக்களிடத்தில் நிதிப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறை தங்காபரண அடகு சேவை என அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டெய்லி மிரர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. எனினும், கலந்துரையாடலில் கலந்துகொண்ட வங்கி அதிகாரிகள் இந்த யோசனைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்தமையால், வங்கிகளால் வழங்கப்பட்ட தங்காபரண அடகுக்கடன் காரணமாக பல பில்லியன்கள் நட்டம் ஏற்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, கம்பெரலிய மற்றும் என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டங்களினூடாக மக்களுக்கு நிவாரண அடிப்படையில் கடன் வழங்குமாறு அரச உயர் அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனியார் வங்கிகளின் அதிகாரிகள் அதற்கு திருப்தி வெளியிடவில்லை. கம்பெரலிய மற்றும் என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டங்களினூடாக கிராமப்புற மக்களுக்கு கடனை வழங்கி பணப்புழக்கத்தினை அதிகரித்து அரசியல் இலாபத்தைப் பெறுவதற்கு முயற்சி இடம்பெறுவதாக டெய்லி மிரருக்கு கருத்து வெளியிட்ட சில பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.