அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவிற்கு அழைப்பு

அமைதிப் பேச்சு நடத்த இந்தியாவிற்கு இம்ரான் கான் அழைப்பு

by Bella Dalima 22-08-2018 | 4:08 PM
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவிற்கு பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். முன்னேற்றப்பாதையில் பயணிக்க இது அவசியம் என அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீஃப் அரசு ஊக்குவித்ததால், அந்நாட்டுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக் கொண்டது. இந்தநிலையில், பாகிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் பிரதமராகவுள்ள இம்ரான் கான், இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று (31) அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
“இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்”
என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி”
என்றும் கூறியுள்ளார்.