ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

by Bella Dalima 21-08-2018 | 3:55 PM
Colombo (News 1st) கொழும்பு - வோர்ட் பிளேஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பயணித்தமையால் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடை மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாடம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வோர்ட் பிளேஸ் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போதிலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். சிறிது நேரத்தின் பின்னர் கலைந்து சென்ற பல்கலைக்கழக மாணவர்கள், மீண்டும் கொழும்பு நகர மண்டபத்தில் கூடியிருந்தமையால், அவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அந்த தாக்குதலின் பின்னரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மண்டபத்திற்கு அருகில் கூடியிருந்தனர்.