துறைமுகத்தை பார்வையிடவுள்ளார் ஜப்பான் அமைச்சர்

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடவுள்ளார்

by Staff Writer 21-08-2018 | 7:40 PM
Colombo (News 1st)  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் Itsunori Onodera, 99 வருட குத்தகை அடிப்படையில் சீன அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடவுள்ளார். அத்துடன், திருகோணமலை துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் Itsunori Onodera ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இரு நாடுகளுக்கு இடையேயான சமுத்திர பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது. அண்மையில் ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட போது ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமருக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற கலந்துரையாடலின் பயனாக கடற்பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக 1.8 பில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு கப்பல்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் Itsunori Onodera இன்று சந்தித்தார். இதேவேளை, ஜப்பானின் பிரதம சங்கநாயக்கரும் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவருமான பானகல உபதிஸ்ஸ தேரரை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று மாலை சந்தித்தார். ஜப்பான் தூதுக்குழுவினர் நாளை மாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச்செல்லவுள்ளனர்.  

ஏனைய செய்திகள்