புவனேக குணதிலக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை

ஆசிய விளையாட்டு விழா: பட்மிண்டன் வீரர் புவனேக குணதிலக ஒற்றையர் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை

by Staff Writer 21-08-2018 | 8:20 PM
Colombo (News 1st)  18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினம் இடம்பெற்ற சில போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர். இதேவேளை, பட்மிண்டன் வீரரான புவனேக குணதிலக ஒற்றையர் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ''ஆசியாவின் பலம்'' எனும் தொனிப்பொருளைக் கொண்ட ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை இடம்பெற்ற ஆடவருக்கான 50 மீட்டர் நீச்சல் போட்டியில் முதல் சுற்றில் மெத்திவ் அபேசிங்க மற்றும் அவரது சகோதரரான கைல் அபேசிங்க ஆகியோர் தோல்வியடைந்தனர். இலங்கை மகளிர் அணியுடன் நடைபெற்ற கபடி முதல் சுற்றுப்போட்டியில் 38 - 12 எனும் புள்ளிகள் பிரகாரம், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இலங்கை ஆடவர் கபடி அணிக்கு எதிரான போட்டியை 29 - 25 எனும் புள்ளிகள் கணக்கில் பங்களாதேஷ் வென்றது. அணிக்கு மூவர் கொண்ட ஆடவருக்கான கூடைப்பந்தாட்டத்தில் முதல் சுற்றில் சீனா மற்றும் தாய்லாந்து அணிகளிடம் இலங்கை தோல்வியுற்றது. பளுதூக்கல் போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட சமரி வர்ணகுலசூரிய மொத்தமாக 169 கிலோகிராம் எடையைத் தூக்கி 10 ஆம் இடத்தை அடைந்தார். இதேவேளை, பட்மிண்டன் போட்டிகளில் புவனேக குணதிலக போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளது. ஒற்றையர் பிரிவில் போட்டியிட நிலுக கருணாரத்ன, தினுக கருணாரத்ன, புவனேக குணதிலக ஆகியோரை இலங்கை பட்மிண்டன் சங்கம் பிரேரித்துள்ளது. எனினும், புவனேக குணதிலகவின் பெயரை நீக்கிய தேசிய ஒலிம்பிக் குழு நிலுக மற்றும் தினுகவின் பெயர்களை மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, தம்மால் அது குறித்து தகவல்களை வழங்க முடியாதென பட்மிண்டன் சங்கத்தின் இடைக்கால நிர்வாகக்குழுத் தலைவரான நிஷாந்த ஜயசிங்க தெரிவித்தார். இதற்கு முன்னர் 400 மீட்டர் கலப்பு, உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளுக்கான வீர, வீராங்கனைகள் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.