மஹிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

மஹிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 20-08-2018 | 9:03 PM

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இன்று (20) கல்கிசை மேலதிக நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார், அவுஸ்திரேலியாவில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குமூலமும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி 'த நேஷன்' பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நொயார், வேன் ஒன்றில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாணைகளின் முன்னேற்றம் குறித்து அரசதரப்பு சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம தாக்கல் செய்த மேலதிக அறிக்கையில் இந்த வாக்குமூலங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகின. கீத் நொயார் கடத்தப்பட்ட நாளில் வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் ஞாபகமில்லை என முன்னாள் ஜனாதிபதி தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் அறியக்கிடைத்ததும் தாம் ஜனாதிபதி செயலாளர் அல்லது பாதுகாப்பு செயலாளரை தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு சிலவேளை கூறியிருக்கலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்களை அவர் நிராகரிக்கவில்லை எனவும் அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். வழக்கின் 8ஆவது சந்தேகநபரான ஓய்வுபெற்ற இராணுவப் படைகளின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசெகரவிடம் நீதிமன்ற அனுமதியுடன் மூன்றாவது தடவையாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்று, பாதிக்கப்பட்ட கீத் நொயாரிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் சுருக்கத்தையும் அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாசித்தார். 2008 ஆம் ஆண்டு நேஷன் பத்திரிகையின் பிரதி ஆசிரியராக தாம் பணியாற்றியபோது, "சென்பதி" என்ற புனைப்பெயரில் அரசாங்கம் மற்றும் இராணுவத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கட்டுரைத் தொடரொன்றை எழுதியதாக கீத் நொயார் தெரிவித்துள்ளார். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், இராணுவம் மற்றும் பொலிஸாரின் குறைபாடுகளை தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைகள் பிரசுரமானதன் பின்னர் ஒருநாள் தாம் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு சென்றுகொண்டிருந்தவேளை, இராணுவ ஜீப் வாகனம் தம்மை பின்தொடர்வதை உணர்ந்ததாகவும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்ததும் அந்த நிலைமை மாறியதாகவும் கீத் நொயார் கூறியுள்ளார். அன்றைய தினம் இரவு வேளையில் வெள்ளை வேனில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் திடீரென நுழைந்து, தம்மை தாக்கி கண்களை கட்டி கடத்திச் சென்றதாகவும் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்திச் செல்லும் வழியில் தம்மை தாக்கியவர்கள், எல்.ரி.ரி.ஈ. இயகத்துடன் தொடர்புள்ளதா? என வினவியதாகவும் கீத் நொயார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியுள்ளார். பின்னரே ஏதோவொரு இடத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் தமது ஆடைகளை கலைந்து தாக்கியதாகவும் கீத் நொயார் தெரிவித்துள்ளார். தாம் தக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சரி சேர், சரி சேர் என பதிலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும் கீத் நொயார் வாக்குமூலமளித்துள்ளார். பின்னர் எழுந்து முகத்தை கழுவி ஆடைகளை அணிந்துகொள்ளுமாறு அவர்கள் கீத் நொயாருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் தம்மை தெஹிவளை பகுதியில் அவர்கள் கைவிட்டுச் சென்றதாகவும் கீத் நொயார் அவுஸ்திரேலியாவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுக் கொண்டதன் பின்னர் உயிர் பாதுகாப்பு கருதி அவுஸ்திரேலியா சென்றதாகவும் கீத் நெயார் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கீத் நொயார் கடத்தப்பட்டு தொம்பை பதுவத்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீடு தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் கோரினாலும் அதற்கான பதில் கிடைக்கவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளரிடம் தொடர்ந்தும் பதிலை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். தகவல்களை வழங்குமாறு தெரிவித்து பாதுகாப்பு செயலாளருக்கு நினைவூட்டல் கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு இதன்போது கல்கிசை மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க அரச தரப்பு சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளார். 8ஆவது சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை விண்ணம் மீதான பரிசீலனையை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், சந்தேகநபரான மெஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏனைய செய்திகள்