கிருஷ்ணாவை உளவுபார்த்த ஒருவர் கைது

கிருஷ்ணாவை உளவுபார்த்த ஒருவர் கைது

by Staff Writer 20-08-2018 | 8:53 PM

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா என்றழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனை கொலை செய்வதற்காக உளவு பார்த்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று(20) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு - புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அஞ்சன மிதுன் என்பவரே புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சந்தேகநபர், புதுக்கடை இலக்கம் - 3 நீதவான் நீதிமன்றத்தில் நாளை (21) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட தினத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று குறித்த சந்தேகநபர் உளவு பார்த்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு - செட்டியார்தெருவில் கடந்த மாதம் 9 ஆம் திகதி காலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் கொலை செய்யப்பட்டரர். மோட்டார் சைகக்கிளில் சென்ற ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பி சென்றதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பினனர் உயிரிழந்தார். 40 வயதான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நவோதய மக்கள் முன்னணி எனும் சுயாதீன குழு சார்பில் போட்டியிட்டு மாநகர சபைக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.