இம்ரான் கானுக்கு பச்சைக்கொடி காட்டிய மோடி

இம்ரான் கானுக்கு பச்சைக்கொடி காட்டிய மோடி

by Staff Writer 20-08-2018 | 9:09 PM

பாகிஸ்தானுடன் ஆக்கபூர்வமான மற்றும் வௌிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் இம்ரான் கானுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக நிலவும் இந்திய - காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த தாம் தயாராகவிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அதேபோன்று, தேர்தல் வெற்றியின் பின்னர், இந்தியாவில் எண்ணெய் கிளையொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் கடந்த மாதம் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலையை தணிப்பதற்கு பாகிஸ்தானுடனான வௌிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட தாம் தயாராகவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளமையை இந்திய வௌிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 1947 ஆம் ஆண்டின் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் 3 தடவைகள் ஆயுத மோதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான், கடந்த 18 ஆம் திகதி பதவியேற்றார். அவரது தலைமையில் 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். 193 மில்லியன் சனத்தொகை கொண்ட பாகிஸ்தானில், 20 பேர் கொண்ட அமைச்சரவை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளமையானது, வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.