ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

by Staff Writer 19-08-2018 | 10:56 AM

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ரயில் கட்டணம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டண அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் பிரசுரிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே தெரிவித்தார். ரயில் கட்டண திருத்த வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தில் உயர் அதிகாரியொருவர் கூறினார். அமைச்சின் அனுமதி கிடைத்ததன் பின்னர் புதிய கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போது பத்து ரூபாவாக காணப்படும் குறைந்த பட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது. எனினும், ஏனைய ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஆசன ஒதுக்கீட்டு கட்டணமும் திருத்தப்படவுள்ளது. ரயில் கட்டண திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ரயில்வே பொது முகாமையாளர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டது. எரிபொருள் செலவு, புதிய பஸ் கட்டணங்கள் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் நட்டத்தை ஒப்பிட்டு ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த குழு பரிந்துரை செய்தது. எவ்வாறாயினும் குறித்த குழுவினர் முன்வைத்த யோசனையில் வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட 15 வீத கட்டண அதிகரிப்பிற்கு மேற்பட்ட தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக 15 வீதத்தால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு குறித்த குழு தீர்மானித்தது. சுமார் பத்து வருடங்களாக ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாமையால் 2017ஆம் ஆண்டில் மாத்திரம் ரயில்வே திணைக்களம் 670 கோடி ரூபா நட்டத்தை அடைந்தது. ரயில் ஊழியர்கள் நான்கு நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 64 மில்லியன் ரூபா வருமானத்தை திணைக்களம் இழந்தது. புதிய அரசாங்கம் ஆட்சித்து வந்த நாள் முதல் மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பஸ் கட்டணம் 12 தசம் ஐந்து வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. எரிபொருளுக்கான விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதால், எரிபொருள் விலையும் அவ்வப்போது அதிகரிக்கின்றது. முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டதுடன் முதலாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் கட்டணத்தை பத்து ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. உணவுப்பொதியொன்றின் விலையும் 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்கும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் தற்போதிருந்தே தயாராகி வருகின்றது. இது அரசியல் தந்திரோபாயம் என்பதை மக்கள் உணரவேண்டியுள்ளது. இவை அதற்கான சில உதாரணங்களாகும். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன. டிசம்பர் மாதம் ஆறாம் திகதி சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஜூலை 15ஆம் திகதி சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது.