சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-08-2018 | 6:28 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. குருநாகல் மாநகரசபை மேயர், 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய Jaguar ரகக் காரொன்றை கொள்வனவு செய்யத் தயாராகுகின்றமை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. அதேநேரம், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 125 வீதத்தால் அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 02. ஊருபொக்க பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நீங்கள் மேற்கொண்ட அபிவிருத்திகள் எங்கே என எங்களிடம் கேட்கின்றனர். இவர்களின் கடன்களை செலுத்தினால் நாங்கள் எங்கே அபிவிருத்தியை மேற்கொள்வது? மஹிந்த ராஜபக்ஸவின் ஒரு அமைச்சு தொடர்பில் கூறுகின்றேன் என கருத்துத் தெரிவித்துள்ளார். 03. ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று (18) பகல் சந்திப்பொன்று நடைபெற்றது. 04. நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 05. பெண் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று (18) பதவியேற்றார். 02. நோபல் பரிசு பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொஃபி அனான் தனது 80ஆவது வயதில் நேற்று (18) காலமானார். 03. கேரளாவில் தொடரும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 324 ஆக அதிகரித்திருந்தது. விளையாட்டுச் செய்தி 01. பதினெட்டாவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று (18) கோலாகலமாக ஆரம்பமானது.