பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

by Bella Dalima 18-08-2018 | 4:10 PM
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவானது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது. இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப்பும் போட்டியிட்டனர். இதில் 176 வாக்குகளைப் பெற்று இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீஃப்பிற்கு 96 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில், பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.