சீருடை மாற்றத்திற்கு வட மாகாண தாதியர்கள் எதிர்ப்பு

குடும்ப நல சுகாதார தாதியர் சீருடை மாற்றத்திற்கு வட மாகாண தாதியர்கள் எதிர்ப்பு

by Bella Dalima 18-08-2018 | 8:12 PM
Colombo (News 1st) குடும்ப நல சுகாதார தாதியர் சீருடையை மாற்றுவதற்கு வட மாகாண தாதியர்கள் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளனர். குடும்ப நல சுகாதார தாதியருக்கான பழைய சீருடையை மாற்றி, நீளக்காற்சட்டை மற்றும் மேற்சட்டை சீருடையை அணிய வேண்டும் என்ற சுற்றுநிரூபம் சுகாதார அமைச்சினால் மாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரூடை மாற்றத்திற்கு வட மாகாண குடும்ப நல சுகாதார தாதியர்கள் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளனர். இது மன்னார் மாவட்டத்திற்கும் வட மாகாணத்திற்கும் பொருந்தக்கூடிய உடையாகத் தென்படவில்லை என மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர் சங்கத் தலைவி இ.ஜே.நிமலன் குறிப்பிட்டார். இதேவேளை, வட மாகாண கலை, கலாசார, பண்பாட்டிற்கு அமைவாக சேவையை முன்னெடுக்கும் தமக்கு இந்த சீருடை பொருந்தாது என்பதால், அதனை முற்றாக நிராகரிப்பதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத் தலைவி சசிகலா பவளலிங்கம் தெரிவித்தார். மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள மாவட்ட ரீதியான மருத்துவ மாதுக்களின் சங்கங்கள் இந்த சீருடையை ஏற்றுக்கொள்ள முடியாது என கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் குறிப்பிட்டார்.