கடன்களை செலுத்தினால் அபிவிருத்தி செய்வது எவ்வாறு?

கடன்களை மீள செலுத்தினால் அபிவிருத்தியை எவ்வாறு மேற்கொள்வது: பிரதமர் கேள்வி

by Staff Writer 18-08-2018 | 7:43 PM
Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊருபொக்க பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் தெனியாய - பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு 25 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, ஆயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
நீங்கள் மேற்கொண்ட அபிவிருத்திகள் எங்கே என எங்களிடம் கேட்கின்றனர். இவர்களின் கடன்களை செலுத்தினால் நாங்கள் எங்கே அபிவிருத்தியை மேற்கொள்வது? மஹிந்த ராஜபக்ஸவின் ஒரு அமைச்சு தொடர்பில் கூறுகின்றேன்.  பெருந்தெருக்கள் அமைச்சு... நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அவர் கையகப்படுத்தியிருந்த இடங்களுக்காக 40,000 மில்லியன் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 9 வருடங்கள் சென்றதை நாங்கள் மூன்று வருடங்களில் செய்திருக்கின்றோம். எவ்வாறாயினும் பொருளாதார வீழ்ச்சியை நிறுத்தியிருக்கின்றோம்.
நாட்டு மக்கள் முன்னிலையில் பிரதமர் இவ்வாறான கருத்தினை தெரிவித்திருந்தாலும் உண்மை என்ன? கட்சியின் மறுசீரமைப்புக்கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது சிறிகொத்தவிற்கு முன்பாகவுள்ள வீதிக்கு தாரிட்டு உதவி புரிந்தது யார்? விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கிற்கு உதவி செய்தது யார்? அன்று மஹிந்த ராஜபக்ஸவின் துபாய் வங்கியாளர் என அறியப்பட்ட நந்தன லொக்குவிதானவுடன் வியாபார நடவடிக்கைகளை இன்று முன்னெடுப்பது யார்? FCID-க்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் மற்றும் வழக்குகளை தாமதப்படுத்துவது யார்? 2010 ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றதையடுத்து, அது நியாயமாக இடம்பெற்றுள்ளது எனக்கூறி தட்டிக்கழித்து சென்றவர் யார் ? கோப்பி அருந்தி ஒவ்வொருவரையும் பாதுகாத்தது யார்? அன்று பெற்ற கடனை செலுத்துவதாகக் கூறி தேசிய வளங்களை விற்பனை செய்வது யார்? இந்த அரசாங்கம் பெற்ற கடனை செலுத்துவதற்காக எஞ்சிய அரச வளங்களை விற்பனை செய்யும் கூட்டுத்தொழிலை செய்வது யார்? மக்கள் முன்னிலையில் எதிரியாகக் காட்டிக்கொண்டு, திருட்டுத்தனமாக நட்பாகி மக்களுக்கு எதிரான வேலைகளை செய்வது யார்? நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் கையெழுத்திடாது உதவி புரிந்தது யார்?